விஜய்-க்கு வந்த புதிய சிக்கல்.. ஆரம்பமே இவ்வளவு பிரச்சனையா? துவக்கத்திலே மாற்றப்படுமா கட்சி கொடி?
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார்.
இந்த கொடி இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு , நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகக் கொடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் நீல நிறத்தில் யானை சின்னம் இடம்பெற்றிருக்கும். விஜய் கட்சிக் கொடியிலும் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்க வேண்டும் என த.வெ.க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச உள்ளதாக அறிவித்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் த.வெ.க கட்சியின் மேலாளருக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதற்கு அவர் இது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்