உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உருவான கதை..கார்த்திக்கிடம் சவால் விட்ட இயக்குநர் விக்ரமன்!
தமிழ் சினிமாவின் குடும்ப படங்களை எடுக்கக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். இவர் இயக்கிய அத்தனை படங்களும் 100 நாட்கள் ஓடியவை.
நடிகர் கார்த்திக்கிடம் தான் சவால் விட்ட கதையை, இயக்குநர் விக்ரமன் நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் குடும்ப படங்களை எடுக்கக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். இவர் இயக்கிய அத்தனை படங்களும் 100 நாட்கள் ஓடியவை. குடும்ப பாசம் , காதல், நட்பு என அனைத்தையும் கலந்து கட்டி ரசிகர்களை கதையில் கட்டிப்போடுவதில் கைதேர்ந்தவர். இவர் “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” என்ற படத்தை 1998 ஆம் ஆண்டு இயக்கினார். கார்த்திக் மற்றும் ரோஜா ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்த இப்படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் நடிகர் அஜித் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சத்தியப்ரியா , மௌலி , ரமேஷ் கண்ணா , மதன் பாப் மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்தார்கள். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த இப்படம் கார்த்திக்கின் 100வது படமாகும். இந்த படம் 250 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் கன்னடத்தில் கனசுகரா எனவும், தெலுங்கில் ராஜா என்ற பெயரிலும், ஒடியாவில் மோ துனியா து ஹி து மற்றும் பெங்காலியில் ஷகல் சந்தியா என்றும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் முதலில் இந்த படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்க மறுத்த கதையை இயக்குநர் விக்ரமன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில், முதலில் “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” படத்தில் 3 நாட்கள் மட்டுமே நடித்தார். படத்தின் ஷூட்டிங் வாகினி ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. கார்த்திக் 4வது நாள் தயாரிப்பாளரை அழைத்து, எனக்கு இந்த கதை அவ்வளவாக பிடிக்கவில்லை எனவும், இது நான் ஏற்கனவே நடிச்ச “நந்தவன தேரு” படத்தின் கதை போலவே இருக்கிறது என சொல்லி குழப்பமாக இருந்தார். ஷூட் போய் கொண்டிருக்கும்போது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து என்னிடம் சொல்கிறார்கள்.
அன்றைக்கு அவர் நடித்து விட்டு மேக்கப் ரூமில் அமர்ந்து இருந்தார். நான் ஷூட்டிங் முடிச்சிட்டு பேராக அவரை பார்க்கச் சென்றேன். என்ன சார் பிரச்சினை என கார்த்திக்கிடம் கேட்டேன். எனக்கென்னமோ இந்த கதை நந்தவன தேரு படம் மாதிரி இருக்கு. அதிலும் நான் ஹீரோயினை பாடகியாக்குவேன். அந்த மாதிரி இருப்பதாக அவர் சொன்னார்.
உடனே நான், சார் அது வேறு, இது வேறு. இது பாடகியாக்குவது எல்லாம் கதையல்ல. பாடகியாக முன்னுக்கு வந்த ஒருவர் நான் இவர்னாலதான் முன்னுக்கு வந்தேன்னு நன்றி கூறிம் ஒரு கதை. நீங்க சொல்லுற நந்தவன தேரு படத்துக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நடிங்க. இல்லையென்றால் தயாரிப்பாளர் உங்களை வைத்து வேறு படம் எடுக்கட்டும் நான் வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைத்து இந்த படத்தை 100 நாட்கள் ஓட வைக்கிறேன் பாருங்கள் என சொல்லி சவால் விட்டேன். அதற்கு கார்த்திக், நீங்கள் இவ்வளவு நம்பிக்கையா இருந்தால் நான் கட்டாயம் நடிக்கிறேன் என சொன்னார்” என விக்ரமன் கூறியுள்ளார்.