வயநாடு நிலச்சரிவு… உதவிகரம் நீட்டிய தனுஷ்…!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இதன்காரணமாக 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. இது அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பல பேர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை தேடுதல் பணி 12 நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இதில் பலபேர் வீடுகள் குழந்தைகளை இழந்து முகாமில் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு இயக்கங்களில் இருந்து நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் நிதியுதவிகளை செய்து வருகின்றனர்.
தற்போது இவர்கள் இந்த சோகமான துயரத்தில் இருந்து மீண்டு வர நடிகர் தனுஷ் நிதிஉதவி வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கேரள மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளாராம்.
-பவானி கார்த்திக்