கழிவுநீர் கால்வாய் வேண்டும்.. ஆட்சியர் காலில் விழுந்த மூதாட்டி..
வேலூர் மாவட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒரு குறிப்பிட்ட தாலுகாவிற்கு செல்வார்கள்.
காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை 24 மணி நேரம் சம்பந்தப்பட்ட தாலுகாவிற்கு உள்ளே தங்கி, அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஜூன் 2024 ஆம் ஆண்டிற்கான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வேலூர் மாவட்டத்தில்
கே.வி குப்பம் தாலுகாவில் இன்று நடைபெற்றது.
முதலாவதாக வடவிருஞ்சிபுரம் பகுதியில் நீர்வளத் துறை சார்பாக பாலாற்றில் கரையோரம் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
பின்னர் காமராஜபுரம் அரசு துவக்க பள்ளிக்குச் சென்று மாணவர்களிடையே கலந்து உரையாடினார்.
பின்பு பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்தார். அதன் பின் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் சரியான முறையில் கொடுக்கப்பட்டதா என விசாரணை மேற்கொண்டார்.
அதன் பிறகு பள்ளியை விட்டு வெளியே வந்த மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து கொண்ட ஊர் பொதுமக்கள் தங்களுக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதில் ஒரு மூதாட்டி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அதன் பின் முனாபட்டு பகுதியில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு கட்டித் தரப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார்.
அப்பொழுது அங்கிருந்த பெண்கள் தங்களுக்கு இதுவரை மூன்று வருடம் ஆகியும் பட்டா வழங்கவில்லை அதே போன்று மின் இணைப்பும் இதுவரை தங்களுக்கு கொடுக்கவில்லை என மனு அளித்தன.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் 2 மணி நேரத்தில் உங்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அங்கிருந்த சிலர் இங்கு வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு வீடு வழங்கப்பட்டிருக்கின்றன ஆனால் இந்த பகுதியில் உள்ள 23 வீடுகளில் நான்கு வீடுகளில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மற்றவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடுகளை வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர் அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த வீடு இவ்வாறு வாடகை விட்டு சம்பாதித்து வருவதாகவும் இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
அதன்பின் வடுவந்தாங்கல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டிடங்கள் உறுதி தன்மையோடு இருக்கிறதா என்று கைகளால் சுவற்றை தட்டிப் பார்த்தார் பின்பு மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தை உடனடியாக இந்த பகுதியில் திறக்க வேண்டும் என உத்தரவுமிட்டார்.
-பவானிகார்த்திக்