“எதை தேடி நீ வந்தாயோ அது நிறைவேறிவிட்டது” மஹாபெரியவா ஆன்மீக கதை -15
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம். தில்லியிலுருந்து மும்பைக்கு பிளைட்டில் டிக்கெட் கிடைக்கவில்லை ஓர் ஆங்கிலேயருக்கு.
சென்னை சென்று அங்கிருந்து செல்வோம் என்று எண்ணியவர், பிளைட்டில் சென்னை வந்தார். மும்பை பிளைட்டுக்கு அதிக நேரமிருந்ததால் யோசித்தபடியே வெளியே வந்தார்.
டாக்ஸியில் ஏறியவர் டிரைவரிடம் “மதகுரு’ யாரேனும் இருந்தால் என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றார். டாக்ஸி டிரைவர், காஞ்சிபுரம் அழைத்து வந்தார். ஸ்வாமிகள் அப்போதுதான் ‘பிட்ஷை’ முடித்து சற்று ஓய்விலிருந்தார்கள்.
ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்த ஆங்கிலேயரிடம், “ஸ்வாமிகள் ஓய்வில் இருக்கிறார்கள். தயவுசெய்து தாங்கள் சிறிது நேரம் பொறுத்திருக்க வேண்டும்” என்றார்கள் சிஷ்ய பிள்ளைகள்.
ஸ்வாமிகள் எழுந்ததும் தன் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டார்கள். “அவர் வந்தாயிற்றா” என்றார்கள். யாரைக் குறிப்பிடுகிறார்கள் ஸ்வாமிகள் என்று சிஷ்யர்களுக்குப் புரியவில்லை.
எப்போதும் வரும் பெண்கள் தான் வந்திருந்தார்கள். புதியவர்கள் எவரும் வரவில்லையே என்று குழம்பினார்கள். மீண்டும் ஸ்வாமிகள், “அவர் வந்தாயிற்றா..?” என்ற கேள்வியைக் கேட்டார்கள்.
அப்போது தான் தாங்கள் ஓர் வெள்ளைக்காரரை, காத்திருக்கச் சொன்னது ஞாபகம் வந்தது. “ஆம். ஓர் அயல்நாட்டுக்காரர் வந்து காத்திருக்கிறார்”. என்றார்கள் சிஷ்யர்கள். “இத்தனை நா ழி அவரைப் பற்றித்தான் கேட்டுண்டிருந்தேன். வரச்சொல் என்றார்கள்.
பெரியவா அழைப்பதாக அவரிடம் கூறவும் அவருக்கு அளவில்லாத ஆனந்தம். பெரியவாளின் அருகே வந்தவர் வணங்கியபின் அவரின் அருகே அமர்ந்து கொண்டார். ஸ்வாமிகள் உத்தரவு இல்லாமல் அப்படி அமர்வது வழக்கமில்லை என்பதால் சிஷ்யர்கள் தடுக்க முன்வந்தார்கள்.
ஆனால் ஸ்வாமிகளோ அவர் அமர்ந்ததை, அனுமதிப்பவர்கள் போல் சிஷ்யரை தடுத்துவிட்டார். மிக பவ்யமாக ஸ்வாமிகளின் அருகில் அமர்ந்த வெளிநாட்டுக்காரர், மிகுந்த களிப்புடன் பெரியவாளையே பார்த்த வண்ணமிருந்தார்.
அவரது முகத்தையே கேள்விக்குறியுடன்..? சிஷ்யர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பார்வையின் பொருளை உணர்ந்தவர் போல் வெள்ளையரும். “ஸ்வாமிஜியை சுற்றிலும் ஒளி பாய்கிறது. உங்களுக்குத் தெரியவில்லையா..?
இதைத்தான் அன்று பால் பிரண்டன் எழுதிவைத்தார்” என்றார். அரைமணி நேரம் கடந்தபின் ஸ்வாமிகள், வெள்ளையரிடம், “எதை தேடி நீ இந்தியா வந்தாயோ அது நிறைவேறிவிட்டது” என்றார்கள் ஸ்வாமிகள்.
பால் பிரண்டனுக்கு பரமேஸ்வரனாகக் காட்சி கொடுத்த மகானல்லவா இவர்..! அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..