வாழ மறுத்த மனைவி.. கொலை செய்த 2 வது கணவன்..!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவை சேர்ந்தவர் மேகலா. இவருக்கு திருமணமாகி பரமேஸ்வரன் என்ற கணவரும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே பரமேஷ்வரன் மற்றும் மேகலா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டாக பிரிந்து வாழ்ந்தனர்.
பின்னர் மேகலா குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டு பரமக்குடி பாரதி நகர் பகுதியில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்குள் கடந்த ஒரு மாதமாக தகராறு ஏற்பட்டதால் மேகலா மணிகண்டன் உடன் பேசுவதை தவிர்த்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேகலா புகார் அளித்த நிலையில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு மேகலா தன்னுடைய தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மணிகண்டன் ஏன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாய் என்று கேட்ட நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மேகலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்