அந்தக்காலம் போல வருமா..? இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..!
அந்தக் காலம் தான் நன்றாக இருந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் பிடித்த விளையாட்டுகளை வயதொத்த அனைவருடனும் விளையாடினோம், பெரும்பாலும் தெருவிலேதான்.
அப்போது பல இண்டோர் கேம்ஸ்கள் இருந்தன. பல்லாங்குழி, ஈக்குச்சி எடுக்கறது, தாயம், கல்லாங்காய், திருடன் போலிஸ் சீட்டு விளையாட்டு, பரமபதம் இன்னும் பல. ஒன்றில் சலிப்பு வரும்போது அடுத்ததை விளையாண்டோம்.
ரேடியோவில் பாட்டுமட்டுமல்லாது ஒலிச்சித்திரம், நாடகம், செய்திகள் ஏன் விளம்பரங்கள் கூட கேட்டு மகிழ்ந்தோம். ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனில் என்ன படம் போடுவார்கள் என காத்திருந்து பார்த்தோம்.
வயலில் அறுவடைக்காலங்களில் ஊருக்கே புத்துணர்ச்சி வந்ததுபோல் காணக்கண்டோம். ஊர்த்திருவிழா எப்பொழுது வரும் இந்த வருடம் ஏதாவது பொம்மை வாங்கித் தருவார்களா என ஏங்கிக்கிடந்தோம்.
ஸ்னாக்ஸ் என்கிற வார்த்தையை நாம் அறிந்திருக்கவில்லை. விருந்தினர்கள் வீட்டிற்கு வரும்போது வாங்கி வரும் திண்பண்டங்களில் காரா சேவ் கண்டிப்பாக இருக்கும்.
சைக்கிள் ஒட்ட கற்றுக்கொள்ள சில வழிமுறைகள் காணக்கண்டோம். முதலில் குரங்கு பெடல் அப்புறம் தான் சீட்டில் உட்கார்ந்து ஒட்ட கற்றுக் கொண்டோம்.
காரில் மைக் வைத்துக்கொண்டு நோட்டிஸ் களை விசிறிச்சென்றால் தேர்தல் வருகிறதென அறிந்தோம். குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்வதற்கு மிகப்பெரிய திட்டமிடல் தேவையாய் இருந்தது நம் பெற்றோருக்கு.
பொரியரிசி, வறுத்த புளியங்கொட்டை, வீட்டில் உரலில் இடித்த அவல், நீர் உருண்டை இது போன்றவைகள் தான் டைம் பாஸ் மெட்டீரியல்கள்.
– வீர பெருமாள் வீர விநாயகம்.