கேரளாவின் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூர் என்ற இடத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டார்கெட்டை முடிக்காத ஊழியர்களுக்கு கழுத்தில் கயிறு கட்டி நாய் போல இழுத்து சென்று கொடூரமான தண்டனை வழங்கிய வீடியோ சமீபத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கம்யூனிசம் சித்தாந்தம் ஊறிய ஒரு மாநிலத்திலேயே இப்படியா? என்கிற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
இந்த மாநிலத்திலுள்ள கோர்பா மாவட்டம் கப்ராபட்டி என்ற இடத்தில் சோட்டு குஜ்ஜார் என்பவருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் தொழிற்சாலை உள்ளது. இங்கு, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் பாம்பி, வினோத் பாம்பி ஆகியோர் வேலை பார்த்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி இந்த தொழிற்சாலையில் இருந்து பணம் காணாமல் போனதாக கூறி, சோட்டு குஜ்ஜார் தனது நண்பர் முகேஷ் ஷர்மாவுடன் சேர்ந்து, இரு ஊழியர்களையும் துன்புறுத்தியுள்ளார்ர். நிர்வாணப்படுத்தி எலக்ட்ரிக் ஷாக்கும் கொடுத்துள்ளனர். இருவரின் கையில் இருந்த நகங்களை குறடு கொண்டு பிடுங்கியுள்ளனர். இதனால், இருவரும் வலியால் துடித்துள்ளனர். இவர்களை துன்புறுத்திய போது, எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் பரவியது.
இந்த நிலையில் ஐஸ் தொழிற்சாலையில் இருந்து தப்பிய தொழிலாளர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சொந்த ஊரான குலாபூராவுக்கு சென்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இருவரின் நிலையை கண்ட போலீசார், ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இப்படி, எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் இருவரும் எந்த காவல் நிலையத்துக்கும் சென்று புகார் அளிக்க முடியும்.
இதையடுத்து , கோர்பா போலீஸ் நிலையத்தில் சோட்டு குஜ்ஜார், முகேஷ் ஷர்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அபிஷேக் பாம்பி, தனது உரிமையாளரிடத்தில் வாகனம் வாங்க 20 ஆயிரம் அட்வான்ஸ் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், வேலையை விட்டு போவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் சோட்டு குஜ்ஜார் இருவரையும் தாக்கியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக இது வரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.