திருச்சி காஜாமலை சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து 2,764 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும்,8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உலக தரத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் விளையாட்டு துறையில் நமது மாணவர்கள் பல நாடுகளுக்கு சென்று வெற்றி பெற மற்றும் அவர்கள் பெரிய அளவில் வளர பெரும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய முதல்வர், இலவச பேருந்து பயணத்தின் காரணமாக பெண்களின் சமூக பொருளாதார தரம் உயர்ந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் பெண்கள் வெளியில் வந்து பல்வேறு சிறு தொழில்களை துவங்கியுள்ளதாகவும் விளிம்பு நிலை மக்களுக்கான அரசாங்கமாக திமுக அரசாங்கம் செயல்பட்டு வருவதாக கூறினார்.