உ.பி.யில் இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் முதலமைச்சாராக 2 ஆவது முறை யோகி ஆதித்யநாத் நேற்று(மார்ச்.25) பதவியேற்றார். இதையடுத்து, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று(மார்ச்.26) நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உ.பி. முதல்வர், கொரோனா காலத்தில் இருந்து தொடங்கப்பட்ட இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பயனடைவார்கள் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதரவை வழங்கும் வகையில், பிரதான் மந்திரி அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 80 கோடி குடிமக்கள் பயன் பெற்று வருகின்றனர். ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2022 வரை சுமார் 15 மாதங்களுக்கு நாட்டிற்குள் இந்தத் திட்டத்தின் பலனை 15 கோடி மக்கள் பயன்படுத்திக் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.